| பிள்ளைகள் முன் சண்டை போடுகின்ற பெற்றோரா..? |
உலகின் மிக மோசமான பிறவி நீங்கள் என்பேன்.
ஏன்?
முதலில் திருமண பந்தம் எதற்கு என்று உங்களுக்குத் தெரியவில்லை போலும். உடல் புணர்ச்சிக்கு அப்பாற்பட்ட உள்ளப் புணர்ச்சி தான் திருமணத்துக்கு அடிப்படை. இங்கே ஈகோ இருக்கக் கூடாது. ஈகோ இருப்பின் உள்ளப் புணர்ச்சி நிகழாது. பிறகு நீயா நானா போட்டி உருவாகி விடும்.
இன்பம் துன்பம் கலந்ததுதான் வாழ்க்கை. அவற்றை இருவரும் பகிர்ந்துக் கொள்ள வேண்டியது அவசியம். சுயநலம் அறவே கூடாது. ‘நான்’ தலைதூக்கக் கூடாது. ‘எனக்கு’ எனும் எண்ணம் தோன்றக் கூடாது. தியாக உள்ளம் வேண்டும். இந்தத் தியாகம் இருவருக்கும் இடையே பரஸ்பரமாக இருக்க வேண்டும். குறிப்பாக வெளிப்படை மனம் வேண்டும். ஒளிவு மறைவு கூடாது. எந்த நிலையிலும் கோபம் தலைத் தூக்கக் கூடாது. கோப உணர்வு புற வாழ்வுக்கு உரியதே அன்றி அக வாழ்வுக்கல்ல. ஊடல் இருக்கலாம். சந்தேகம் . .கூடவே கூடாது. நம்பிக்கைதான் இல்லறத்துக்கு அடிப்படை. அதற்கேற்ப நேர்மையாக வாழ வேண்டும்.
இல்லறத்துக்கு என்று ஐந்திணை ஒழுக்கத்தை நம் தொல்காப்பியர் முன்மொழிகிறார். புணர்தல், இருத்தல், ஊடல், இரங்கல், பிரிதல். இவற்றில் கோபம், ஆத்திரம், வெறுப்பு, சந்தேகம் ஆகிய எதிர்மறை உணர்ச்சிகள் இடம்பெறவில்லை என்பதைக் கவனிக்கவும்.
ஊடல் என்பது அன்பு கலந்த கோபத்தைக் குறிக்கும். ‘நான் உன்னிடம் பேசமாட்டேன் என்று சொல்லி தூரப் போய் விட்டால் அது கோபம். போகாமல் பக்கத்திலேயே அமர்ந்தால் அது ஊடல். இதைக் ‘கோபித்துக் கொள்ளுதல்’ என்போம். இல்லறம் நடத்துவோருக்கு இந்தளவுதான் எல்லை.
ஆனால், நடைமுறையில் நடப்பதென்ன..?
சின்ன சின்ன விஷயத்துக்கும் சண்டை. பிணக்கு. சந்தேகம். வாய்க்கலப்பு. பிறகு கைக் கலப்பு. சில தம்பதியர் ஆண்டுக் கணக்கில் பேச்சு வார்த்தை இன்றி ஒரே வீட்டில் வாழ்கின்றனர். 'மோகம் முப்பது நாள் அறுபது நாள்' எனும் பழமொழியைப் பலர் புதுப்பித்துக் கொண்டிருக்கின்றனர். காதல் திருமணத் தம்பதியர் கூட இப்படித் தான் இருக்கின்றனர். இவர்களுக்கு திருமணம் ஒரு கேடா ? காதலுக்கே தகுதி இல்லாதவர்கள்.
போகட்டும். தொடங்கிய பிரிச்சினைக்கு வருவோம்.
உங்கள் பிள்ளைகள் முன் நீங்கள் சண்டை போட்டால் அவர்கள் மனம் எவ்வளவு பாடுபடும் என்று உங்களுக்குத் தெரியுமா? உங்கள் இருவரின் கூட்டுப் படைப்புதான் உங்கள் பிள்ளைகள். அவர்கள் உடலில் மட்டுமல்ல உள்ளத்திலும் நீங்கள் இவர்தான்
சரிபாதியாக இருக்கின்றீர்கள்.
அப்படி இருக்கும்போது நீங்கள் அவர்கள் முன் சண்டை போட்டால் அவர்கள் மனம் பாதிப்பிற்குள் ஆகும். அடிக்கடி சண்டை போட்டால் பிள்ளைகள் மனம் இரண்டாகப் பிளந்துப் போகும். மனச்சிதைவு ஏற்பட வாய்ப்பு உண்டாகும். அவ்வேளையில் எப்பக்கம் சார்ந்திருப்பது என்கிற குழப்ப மனநிலை பிள்ளைகளுக்கு ஏற்படும். இதில் அவர்களால் முடிவுக்கு வர முடியாது. காரணம், அவர்களுக்கு நீங்கள் இருவரும் தேவை. உங்களுக்கு வேண்டுமென்றால் அவர்கள் இரண்டாம் பட்சமாக இருக்கலாம். அவர்களுக்கு நீங்களே முதல் பட்சம்.
உங்களால் கட்டப் பட்ட அந்த பிஞ்சு மனங்களை நீங்களே சிதைக்கலாமா? அவர்களின் எதிர்காலம் உங்களில் நிகழ்காலத்தின் மீதுதான் கட்டமைக்கப் படுகிறது என்பதை அறியவும். அடித்தளம் நன்றாக இருந்தால்தானே கட்டடம் நன்றாக இருக்கும்.
உங்கள் சின்ன வயதில் உங்கள் முன்னே உங்கள் பெற்றோர் சண்டை போட்டிருந்தால் அது உங்களை எவ்வளவு பாதித்திருக்கும் என்று எண்ணிப் பாருங்கள்.
அப்படித் தானே உங்கள் பிள்ளைகளுக்கும் இருக்கும். Role Play செய்துப் பாருங்கள். உண்மை விளங்கும்.
முதலில் சண்டையைக் கைவிடுங்கள். பேசித் தீர்க்காத பிரிச்சினை என ஏதும் இல்லை. எப்படியோ கணவன் மனைவி என்றாகி விட்டது. உங்களுக்குள் கொஞ்சம் விட்டுக் கொடுத்தால்தான் என்ன ? மனைவி நலனுக்காகக் கணவனும் கணவன் நலனுக்காக மனைவியும் என வாழ்ந்தால் இல்லறம் சொர்க்கம்.
முழுமையான ஆண்மை தமக்குரிய பெண்மையை போற்றும். முழுமையான பெண்மை தமக்குரிய ஆண்மையைப் போற்றும். இருவருக்கும் இடையே முரண்பாடு இருப்பின் இருவருள் யாரிடமோ அல்லது இருவரிடமோ குறை உள்ளது என்று பொருள்.
அந்தக் குறையைப் போக்கிக் கொள்ள முயலுங்கள். வாழ்கை தெளிவாகும்.
பெற்றோர் வழியில்தான் உலகைப் பிள்ளைகள் பார்க்கின்றனர் என்பார் ஃப்ராய்ட். பெற்றோர் அன்புடன் இருந்தால் பிள்ளைகள் உலகம் சுவர்க்கம். அடித்துக் கொண்டால் பிள்ளைகள் உலகம் நரகம். நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு ஏற்படுத்தித் தரப்போவது சொர்க்கமா நரகமா ? உங்கள் கையில் தான் உள்ளது.
அன்பாக வாழுங்கள் ..முடியவில்லை என்றால் அமைதியாக வாழுங்கள். பிள்ளைகள் நலனுக்காக.
Blackjack - thekingofdealer
ReplyDeleteBlackjack is not only a classic dealer game with a lot of rules, but 우리카지노 also among the most exciting of the casino kirill-kondrashin games. In this